பதிவு செய்த நாள்
13
ஏப்
2023
05:04
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மே 4 நள்ளிரவு நடக்கிறது.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில், ஆண்டு முழுவதும் மதுரை அழகர் கோவிலை போன்ற விழாக்கள் நடப்பது வழக்கம். தொடர்ந்து சித்திரை திருவிழா ஏப்., 30 காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
அன்று தொடங்கி தினமும் யாக சாலை பூஜைகள் மற்றும் மே 3 வரை இரவு 7:00 மணிக்கு பெருமாள் யாக சாலை முன்பு அருள்பாலித்து சிறப்பு தீபாராதனைகள் நடக்கிறது. ஏப்., 4 காலை 8:30 மணி முதல் 10:00 மணிக்குள் பெருமாளுக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. அன்று இரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, ஈட்டி, கத்தி, வளரி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்குகிறார். ஏப்., 5 காலை 9:00 மணிக்கு தல்லாகுளம் மண்டபத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அழகர் அலங்காரமாகிறார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பீச்சாங்குழல் என்னும் துருத்தி மூலம் மஞ்சள் நீரை பீச்சி அடித்தபடி அழகரை வரவேற்பார். தொடர்ந்து காட்டுப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம் சென்று மதியம் 1:00 மணிக்கு ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் சேவை சாதிக்கிறார். பின்னர் பரமக்குடி, எமனேஸ்வரம் முக்கிய வீதிகள் வழியாக பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், இரவு 12:00 மணிக்கு வண்டியூர் எனும் காக்கா தோப்பு கோயிலை சென்றடைவார். ஏப்., 6 சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, அன்று இரவு முழுவதும் விடிய விடிய தசாவதார சேவையில் அழகர் அருள்பாலிப்பார். தொடர்ந்து கருட வாகனம், ராஜாங்க திருக்கோலத்தில் அருள் பாலித்து ஏப்., 9 மாவை 5:00 மணிக்கு மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் திருக்கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.