திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கள்ளபிரான்சுவாமி கோயில் நம்மாழ்வாரால் மங்களாசனம் செய்யப்பட்ட சூரியஸ்தலம். நவதிருப்பதிகளில் முதல் கோயிலாகும். ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் வீதி புறப்பாடும், திருமஞ்சனம், தீர்த்த விநியோகக் கோஷ்டியும் நடந்தது. மாலையில் சுவாமி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்தார். கடந்த 15ம் தேதி சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனமும், இரவில் 4 கருட வாகனங்களில் கள்ளபிரான், பொழிந்து நின்ற பிரான், காசினி வேந்த பெருமாள், விஜயாசனப்பெருமாள் வீதி புறப்பாடும் நடந்தது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை கோயில் நடை திறக்கப்பட்ட விஸ்வரூபம் திருமஞ்சனம் நடந்தது. காலை 8:00 மணிக்கு சுவாமி கள்ளபிரான் தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. கோவிந்தா... கோபாலா...கோஷத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆர். ஆர். கோபால்ஜி, ஸ்ரீவைகுண்டம் கோயில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று 20ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது.