மங்கலதேவி கண்ணகி கோயில் விழா பளியன்குடியில் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2023 08:04
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடியில் நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
தமிழக -கேரள எல்லை கூடலுார் விண்ணேற்றி பாறை மலை உச்சியில் தமிழக வனப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். தமிழக, கேரளா பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு மே 5ல் நடைபெற உள்ள விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பளியன்குடியில் இருந்து கோயில் வரை செல்லும் 6.6 கி.மீ., தூர வனப்பாதையை தமிழக வனத்துறையினர் சீரமைத்துள்ளனர். விழாவிற்கான கொடியேற்றம் நேற்று கோயில் அடிவாரம் பளியன்குடியில் நடந்தது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெண் தெய்வத்தின் வழிபாட்டின் முன்னோடியாக கன்னிமார்கள் எனும் குழந்தைகளுக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். கண்ணகி அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன், செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன், ரேஞ்சர் முரளிதரன், பளியர் இன தலைவர் மனோகரன், ஹிந்து எழுச்சி முன்னணி, ஐந்து மாவட்ட விவசாய சங்கம், நேதாஜி இளைஞர் சங்கம், கேரள கண்ணகி அறக்கட்டளை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.