பதிவு செய்த நாள்
24
ஏப்
2023
08:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா கடந்த மாதம் 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலை, இரவு உற்சவத்தின்போது, சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
இதில், ஆறாம் நாள் உற்சவமான மார்ச் 31ல், 63 நாயன்மார்கள் உற்சவமும், இரவு வெள்ளித்தேர் உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான ஏப்., 1ல் தேரோட்டமும், பத்தாம் நாள் உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா ஏப்., 4ல் நடந்தது. பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் நிறைவு நாளான ஏப்., 7 ல் காலை சந்திரசேகரர் வெள்ளி இடபத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். தொடர்ந்து சர்வதீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இரவு யானை வாகன உற்சவம் நடந்தது. உற்சவத்தின் நிறைவாக, பெரிய விடையாற்றி புஷ்ப பல்லக்கு உற்சவம் நேற்று முன்தினம் இரவு விமரிசையாக நடந்தது. இரவு 8:00 மணிக்கு மல்லி, முல்லை, கனகாம்பரம், தவனம் என, பல மலர்களால்அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், ஏலவார்குழலி அம்பிகையுடன் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து எழுந்தருளினார். சங்கரமடம், செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் வழியாக காமாட்சியம்மன் கோவில் வந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு மண்டகப்படி உற்சவம், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படி முடிந்ததும், அன்னை இந்திரா காந்தி, மேற்கு ராஜ வீதிவழியாக சுவாமி ஏகாம்பரநாதர் கோவில் சென்றடைந்தார்.