பதிவு செய்த நாள்
26
ஏப்
2023
11:04
வைணவத்தில் முதன்மையாக போற்றப்படுபவர் ராமானுஜர். இவரது ஜெயந்தி நாளான சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரம் நாளில், வைணவ திருத்தலங்களில் சிறப்பு வைபவங்கள் நடைபெறும். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான அரங்கநாதர் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலை மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. பின்பு ராமானுஜர் சன்னதியில் புண்ணியா வசனம், விஸ்வக்சேனர், ஆராதனம், நவா கலச ஆவாஹனம், பஞ்ச சுக்தங்கள் ஜெபிக்கப்பட்டு, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. வெண்பட்டு குடை சூழ வெள்ளி சிம்மாசனத்தில் ரங்க மண்டபத்தில் எழுந்தருளிய உச்சமூர்த்தி ராமானுஜருக்கு, அரங்கநாதரிடம் இருந்து பரிவட்ட சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோவில் ஸ்தலத்தார்கள் திவ்ய பிரபந்தத்தில் ராமானுஜர் நூற்று அந்தாதி பாசுரங்களை வாசித்தனர். சிறப்பு வைபவ பூஜை நடந்த பின்பு ராமானுஜர் சன்னதியை அடைந்தார். உச்சிக்கால பூஜை சாற்று முறை சேவித்த பின்பு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.