பதிவு செய்த நாள்
28
ஏப்
2023
04:04
பெ.நா.பாளையம்: வெள்ளிங்கிரி மலையை போல பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பாலமலையை காப்பற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு உட்பட்ட வெள்ளிங்கிரி மலை ஏறும் பக்தர்கள் பலர், தாங்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட், தின்பண்டங்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பைகளை அங்கேயே தூக்கி எறிந்து வந்தனர். இதனால் மலை பாதை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி, அவற்றை அகற்றுவது வனத்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும், அவற்றை உண்ணும் வனவிலங்குகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தன. இப் பிரச்சனைக்கு தீர்வு காண மலையின் அடிவாரத்தில் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு வைப்பு தொகை பெற்றுக்கொண்டு, கீழே வந்து பாட்டிலை திரும்ப அளித்த பிறகு, அந்த வைப்புத்தொகை திரும்ப அளிக்கும் திட்டம் வெள்ளிங்கிரி மலையில் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் மலை ஏறுவதற்கு முன்னர், பக்தர்கள் எடுத்து வரும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு, 20 ரூபாய் வைப்புத்தொகை பெற்றுக் கொள்ளப்பட்டு, பணம் பெற்றதற்கு அடையாளமாக பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மலையேறி இறங்கிய பிறகு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாட்டிலை அளித்துவிட்டு, வைப்பு தொகையை பக்தர்கள் திரும்ப பெற்றுக் கொண்டனர். பிளாஸ்டிக் பாட்டில்கள் மலையில் தேங்குவது தவிர்க்கப்பட்டு, அவை கீழே முறையாக சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலையிலும் செயல்படுத்த வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, இயற்கை ஆர்வலர் மகாதேவன் கூறுகையில்," பாலமலை ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா வரும், 5ம் தேதி நடக்கிறது. ஒரு வாரம் நடக்கும் இத்திருவிழாவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாலமலைக்கு வந்து இறைவனை வழிபடுவர். அப்போது ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகள், மலையில் தேங்க வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் செயல்படுத்தியதைப் போல, பிளாஸ்டிக் பாட்டில் வைப்புத் தொகையை பெற்றுக்கொண்டு திரும்ப ஒப்படைக்கும் திட்டத்தை செயல்படுத்த வனத்துறையினர் முன் வர வேண்டும்" என்றார்.