மேல்மலையனுார் அருகே 17ம் நூற்றாண்டு அம்மன் சிற்பங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2023 08:05
செஞ்சி: மேல்மலையனுார் அருகே 17 ம் நுாற்றாண்டை சேர்ந்த விஷ்ணு துர்கை, பார்வதி சிற்பங்களை ஆய்வாளர் கண்டறிந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள பருதிபுரம் கிராமத்தில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வு செய்தார். அப்போது கி.பி.17ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணு துர்க்கை, பார்வதி சிற்பங்கள் இருப்பதை கண்டறிந்தார். இது குறித்து ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: பருதிபுரம் கிராமத்தில் பழமையான அம்மன் சிலைகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பொறியாளர் வாசுதேவன், பருதிபுரம் சேட்டு ஆகியோர் உதவியுடன் இங்கு கள ஆய்வு செய்தேன். ஆய்வில் 4 அடி உயர பலகைக் கல்லில் விஷ்ணு துர்க்கை சிற்பமும், 2 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் பார்வதி சிற்பமும் இருப்பது தெரிவந்துள்ளது. எருமைத் தலையின் மீது நின்றிருக்கும் விஷ்ணு துர்க்கை நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். ஆடை அணிகலன்கள் வித்தியாசமாகக் காட்டப்பட்டுள்ளன. கால்களுக்கு கீழே தங்களை தாங்களே பலி கொடுத்துக் கொள்ளும் இரண்டு வீரர்கள் அமர்ந்த நிலையில் உள்ளனர். கொற்றவை சிற்பத்திற்கான அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.
பார்வதி சிற்பம் ஒரு காலை மடக்கியும் மற்றொரு காலை தொங்கவிட்டும் அமர்ந்த நிலையில் உள்ளது. பிரம்மாண்டமாகக் காட்டப்பட்டுள்ள பின்னிரு கைகளில் உடுக்கை மற்றும் சூலம் காணப்படுகிறது. இது சிவனின் அம்சம் கொண்ட பார்வதி அல்லது காளியாக இருக்கலாம். இந்த சிற்பங்கள் 17ம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பதை புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விஜய வேணுகோபால் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த சிற்பங்களில் முற்கால கூறுகளும், அண்மைக்கால கூறுகளும் ஒன்றாக சங்கமித்துள்ளன. இருவேறு காலகட்டத்தை சேர்ந்த வளர்ச்சியை ஒன்றாக காணமுடிகிறது. ஒரே கிராமத்தில் வைணவ மற்றும் சைவ சின்னங்களுடன் கூடிய தெய்வ சிற்பங்களை மக்கள் 500 ஆண்டுகளாக வழிபாட்டு வந்துள்ளனர் என தனது கருத்தை தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்தார்.