பதிவு செய்த நாள்
17
மே
2023
10:05
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் உள்ள சுத்தரத்தினேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, 111 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில், சுத்தரத்தினேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமான புன்செய் 134.10 ஏக்கர், நன்செய் 13.73 ஏக்கர், கோவில் புறம்போக்கு 0.01 சென்ட் என மொத்தம் 147.84 ஏக்கர் நிலங்களை, சுமார் 120 பேர் ஆக்கிரமித்து, விவசாய நிலங்களாகவும், வீட்டு மனையாகவும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதை அறிந்த அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 1959ம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டப்பிரிவு, 78ன் கீழ், ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும், தாங்களாகவே முன் வந்து கோவில் நிலங்களை, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாக சமீபத்தில் எழுதிக்கொடுத்தனர். அதன்படி, தஞ்சாவூர் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் (பொறுப்பு) அனிதா தலைமையில், கோவில் நிலங்கள் தனி தாசில்தார் சங்கர் முன்னிலையில், கோவில் தக்கார் பிருந்தாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கோவிலின் கீழ் சுவாதீனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாக விளம்பரப் பலகை வைத்தனர். மீட்கப்பட்ட இடம் 147.84 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுமார் 111 கோடி ரூபாய் மதிப்பாகும். விரைவில் மீட்கப்பட்ட இடங்கள் பொது ஏலத்திற்குக் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.