பதிவு செய்த நாள்
29
மே
2023
11:05
தாரமங்கலம்: சேலம் அருகே கோவிலில், பஞ்சலோக சிலைகளை திருடிய போலி சாமியாரை, போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில், செங்குந்தர் சமுதாய மக்கள் நிர்வகிக்கும், பஜனை பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நுாற்றாண்டு பழமையான ஏழு பஞ்சலோக சிலைகள், கடந்த, 21ல் திருட்டு போனது. ஆசாமிகளை பிடிக்க எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி நடந்தது. இந்நிலையில் நங்கவள்ளி அருகே குள்ளானுாரில், போலி சாமியாரை நேற்று கைது செய்து சிலைகளை மீட்டனர். மீட்கப்பபட்ட சிலைகளை, தாரமங்கலம் ஸ்டேஷனில் வைத்து, எஸ்.பி., சிவக்குமார், ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா பார்வையிட்டனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: குள்ளானுாரை சேர்ந்தவர் சக்திவேல், 50; திருமணமான இவர், 18 ஆண்டாக மனைவியை பிரிந்து தனியே வசிக்கிறார். சாமியார் வேடமிட்டு வீட்டில் பில்லி, சூனியம் உள்ளிட்டவைக்கு அமாவாசை, பவுர்ணமி நாளில் பூஜை செய்து வந்தார். தாரமங்கலம் பெருமாள் கோவிலில் மடத்தில், பல நாளாக இரவில் படுத்து துாங்கியுள்ளார். அங்கு சிலைகள் இருப்பதை தெரிந்து பூட்டை உடைத்து, பஞ்சலோக சிலைகளை திருடியுள்ளார். அவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டி பூஜை செய்ய திருடியதாக விசாரணையில் தெரிவித்தார். அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.