தீர்த்த தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள மூன்று பிரகாரங்கள், அனுப்பு மண்டபம், திருக்கல்யாண மண்டபம், சேதுபதி மண்டபம் தூண்கள் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள சிலைகள், ஓவியங்கள் கலை நயத்துடன் வடிவமைத்து, புனித தலத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் ஆலயமாக உள்ளது. இக்கோயில் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள சேதுபதி மண்டப தூணில், அக்கால மக்களின் வாழ்வியல் குறித்த சிலைகள் 6 அடி உயரத்தில் தத்ரூபமாக வடிவமைத்து உள்ளனர். 250 ஆண்டுகள் பழமையான இச்சிலைகளை ஹிந்து அறநிலைத்துறை கண்டு கொள்ளாமல் விட்டதால் முகம், கை, கால்கள் உடைந்து கிடந்தது. இதனை புதுப்பிக்காவிடில் முற்றிலும் இடிந்து விழுந்து அபாயம் உள்ளது என மே 17ல் தினமலர் நாளிதழில் செய்தி வந்தது. இதுகுறித்து ஹிந்து அறநிலைத்துறை ஆணையர் விசாரித்து, சிலையை புதுப்பிக்க உத்திரவிட்டார். அதன்படி இன்று முதல் சேதமடைந்த சிலைகளை சுண்ணாம்பு, ஒயிட் சிமெண்ட், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் ஆகிய கலவைகளால் ஊழியர்கள் புதுப்பிக்கின்றனர். இப்பணி 10 நாட்கள் நடக்கும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.