திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
பிள்ளையார்பட்டி அருகே உள்ள ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் இன்று காலை 8:00 மணிக்கு வயிரவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. பின்னர் காலை 12:00 மணி அளவில் யாகசாலையில் பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின் கடங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவருக்கு தீபாராதனை நடந்தது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து விபூதிக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்தது. திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீமூலபாலகால பைரவர் சன்னதியில் நேற்று மாலை 4.45 மணிக்கு மகா கணபதி பூஜை நடந்து தீபாராதனைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, கஜ பூஜை, மகா பைரவ ஹோமம் நடந்தது. பூர்ணாகுதிக்கு பின் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படாகி பைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.