பதிவு செய்த நாள்
30
ஜூன்
2023
11:06
சூலூர்: "நிலம், நீர், காற்று உள்ளிட்ட பஞ்ச பூதங்களை காக்க ஒவ்வொருவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்," அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தினர் அறிவுறுத்தினர். அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம், நொய்யல் ஆறு டிரஸ்ட் சார்பில், நொய்யல் பெரு விழா கடந்த, 23 ம்தேதி துவங்கியது. நொய்யல் நதியை மீட்டெடுக்கும் நோக்கில், பேரூராதீனம் தலைமையில் செயல்படும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் முயற்சியில் இறங்கியுள்ளது. நொய்யல் நதி பாயும் 180 கி.மீ., பகுதியில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நொய்யல் நதி பாதுகாப்பு ரதத்துடன் பாதயாத்திரை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, சோமனூர் பிரிவில், முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில் ரதம் மற்றும் சந்நியாசிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாசாணியம்மன் கோவில் பகுதியில் உள்ள நொய்யல் தடுப்பணையில் கற்பூர ஆர்த்தி காட்டி, மலர்கள் தூவி வழிபாடு நடந்தது. சந்நியாசிகள் பேசுகையில், நீர், காற்று, அக்னி உள்ளிட்ட பஞ்ச பூதங்கள் சரிவிகிதமாக இருந்தால் தான் உடல் இயங்கும். இவற்றில் ஒன்றுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உடலை நோய்கள் தாக்கும். அதுபோல், பூமித்தாய்க்கும் பஞ்ச பூதங்கள் முக்கியம். பாதிப்பில் இருந்து அவற்றை காக்கவேண்டும். நொய்யல் நதியை மீட்டெடுத்து பாதுகாக்கும் பணியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், என்றனர். தொடர்ந்து, ராசிபாளையம், கரவழி மாதப்பூரில், நொய்யல் நதி பாதுகாப்பு ரதத்துக்கு, வள்ளி கும்மி ஆட்டம், ஒயிலாட்டம் ஆடி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.