சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி திருவிழா ஜூன் 25 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் இரவு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மூவலப்பெரியாரின் 5 ம் மண்டகப்படி தினமான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி மாலை 6:30 மணிக்கு பூரணை, புட்கலை உடனான சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி அம்பாளுக்கு கிராமத்தார்கள் முன்னிலையில் மாலை மாற்றப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஆதிசேசன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். 6 ம் திருநாளான இன்று இரவு கழுவன் திருவிழா நடக்கிறது.