ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2023 10:07
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, சுவாமி அம்பாளுக்கு காலபூஜைகள் நடந்தது. முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடி வழிபாடு செய்தனர். ஸ்ரீராமர், சீதாதேவி, லெட்சுமணருடன் தங்க கருட வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கி அருள்பாலித்தார். அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
கீழக்கரை: திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புனித நீராடிய பின் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தனர். திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில், ஆடி அமாவாசையன்று வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் சேதுக்கரையில் தரிசனத்தை முடித்து ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் வழங்கப்பட்ட பாயாசத்தை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பாயாசம் வாங்கி குடித்தனர்.