பதிவு செய்த நாள்
18
ஜூலை
2023
01:07
கோத்தகிரி: நீலகிரியில் நடந்த தானிய திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, காணிக்கை செலுத்தி ஐய்யனை வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் குலதெய்வமான ஹிரோடைய்யா திருவிழா, நேற்று துவங்கியது. வனப்பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடை திறக்கப்பட்ட பனகுடியில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஹரிக்கட்டுதல் என்ற தானிய திருவிழா நடந்தது. கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி, பனஹட்டி மற்றும் டி. மணியட்டி கிராமங்களில் சங்கொலி எழுப்பியவாறு வனப்பகுதியில் இருந்து சேகரித்து வந்த மூங்கில் தழைகளை கையிராக நெய்து, அதில் தானிய வகைகளை கோர்த்து, அக்கபக்க கோவிலில் மாலையாக கட்டப்பட்டது. தொடர்ந்து, கோவில் கல்தூணில் நெய்தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் பயபக்தியுடன் காணிக்கை செலுத்தி, ஐயனை வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜை செய்வதால், ஆண்டு முழுவதும் உணவு பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக, கோத்தகிரி தாந்தநாடு கிராமத்தில், மண்டைதண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வெளியூர்களில் இருந்து, தாந்தநாடு கிராமத்திற்கு திருமணமாகி வந்து முதல் ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்கள், பழங்கால ஆபரணங்கள் அணிந்து, குழந்தைகளுடன், கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.