பதிவு செய்த நாள்
24
ஜூலை
2023
01:07
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் ஆடி பிரம்மோற்ஸவ திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 29ம் தேதியும்,தேரோட்டம் ஆக.1ம் தேதியும்,ஆக.2ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோவிலில் வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் ஆடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்க்கான திருவிழா துவக்கமாக இன்று காலை 6:00 மணியிலிருந்து 7:25 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை அர்ச்சகர் கோபி தலைமையிலான அர்ச்சகர்கள் சுவாமிகளுக்கு பால், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.இதைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு சர்வ அலங்காரங்கள் செய்த பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். விழா நாட்களின் போது சுவாமிகள் சர்வ அலங்காரங்களுடன் தினந்தோறும் பரங்கி நாற்காலி, ஹனுமார், கருடன், சேஷம், பூப்பல்லாக்கு, குதிரை, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளிய பின்னர் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 29ம் தேதி இரவு 7:35 மணிக்கும், ஆக.1ம் தேதி தேரோட்டமும், 2ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4ம் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்ஸவ திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன் அர்ச்சகர் முத்துசாமி ஐயங்கார் ஆகியோர் செய்து வருகின்றனர்.