ஹூனைன் போர் முடிந்த காலம். அந்தப்போரில் மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகள் பலர் நபிகள் நாயகத்திற்காக தியாகங்களைச் செய்தனர். போரின் முடிவில் பெரும் செல்வம் கிடைத்தது. அதை மெக்காவில் இருந்து வந்த முஹாஜிர்களுக்கும், இஸ்லாத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கும் கொடுத்தார். மதீனாவாசிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. இச்செயலால் வருத்தப்பட்டவர்கள், ‘தமது மக்களைக் கண்டதும் இவர் நம்மை மறந்துவிட்டார். நம்மையும் மதிக்கவில்லை. நமது செயல்களையும் மதிக்கவில்லை’ என பேசினர். இதை கேள்விப்பட்ட நபிகள் நாயகம், அவர்களிடம், ‘‘அன்சாரிகளே... நான் இங்கு வருவதற்கு முன், நீங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருநீர்கள். இப்போது ஒற்றுமையாக உள்ளீர்கள். அழிந்துபோகும் இந்தச் செல்வத்தின் மீது ஆசைப்படுகிறீர்களே? ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். மக்கள் அனைவரும் ஒரு பாதையிலும் அன்சாரிகளாகிய நீங்கள் மற்றொரு பாதையிலும் நடந்து சென்றால், நான் உங்களுடன் நடந்து வருவேன்’’ என்றார். இதைக்கேட்டதும் அவர்கள், ‘எங்களுக்கு இதுபோதும்’ என மகிழ்ச்சி அடைந்தனர்.