இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் பலரும் தினமும் கோயிலுக்கு போகவும், ஆன்மிக சொற்பொழிவு கேட்கவும், சத்சங்கங்களில் ஈடுபடவும், கடவுளை நினைக்கவே நேரம் இல்லையே என மனம் வருந்துவர். அப்படி பட்டவர்களுக்கான தீர்வு தான் இது. சிவனடியார்களான நாயன்மார்கள் வரலாற்றை கூறும் பெரியபுராணத்தில் ஒருவர் துாய அன்போடு எங்கு வேண்டுமானாலும் கடவுளை வழிபடலாம் என்கிறது. இதை தான்
என இவ்வாறு இருப்பவர்களே கடவுளின் நாமத்தை எப்போதும் மறவாத அடியார்கள் என பாடியுள்ளார் சேக்கிழார். இவர் சொல்லிய வழிகளை பின்பற்றி ஆன்மிகத்திற்கு பலம் சேர்த்தவர்களே அருளாளர்கள். அவர்களுள் ஒருவரான வரதுங்கர்
‘இருக்கினும் நிற்கும் போதும் இரவுகண் துயிலும் போதும், பொருக்கென நடக்கும் போதும் பொருந்தியூண் உய்க்கும் போதும், முருக்கிதழ் கனிவாயாரை முயங்கி நெஞ்சழியும் போதும், திருக்களாவுடைய நம்பா சிந்தனை உன்பால் தாமே’என பாடி இருக்கிறார். எச் செயலில் ஈடுபட்டாலும் கடவுளின் திருநாமத்தை நினைக்க வேண்டும் என்கிறார். இதே கருத்தை தான் முருகபக்தர்களில் ஒருவரான பாம்பன் சுவாமிகள் ‘ எழும் போது வேலும் மயிலும் என்பேன்,எழுந்தே மகிழ்ந்து தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்,தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்,அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே’ என்று பாடியுள்ளார். இப்படி வாழ்பவர்கள் சீரும் சிறப்பும் அடைவர். இதைத்தான் ‘அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே’என்கிறார் அபிராமி பட்டர். இவ்வுலகில் ஒவ்வொருவரும் தன்னை தானே செம்மைப்படுத்திக் கொள்ள கடவுளின் திருநாமங்களை எந்த செயல் செய்தாலும் நினையுங்கள். சொல்லுங்கள்.