பதிவு செய்த நாள்
04
ஆக
2023
08:08
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே கொடிக்குளம் கிராமத்தில் தொல்லியல் கள ஆய்வில் தென்னந்தோப்புக்குள் தரையில் சாய்க்கப்பட்ட நிலையில் உள்ள இரண்டு நடு கற்களை கண்டறிந்தனர்.
உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் முற்காலத்தில் வழிபாட்டுக்குரியனவாக இருந்த நடுகற்கள், அந்த இனக்குழுவினர் இடப்பெயர்வின் காரணமாக காடுகளிலும், வயல்வெளிகளிலும் புதைந்து வருகிறது. தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன், சோலைபாலு ஆகியோர் இந்த பகுதி கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு நடுகற்கள் தொடர்பானவற்றை, ஆவணப்படுத்தி வருகின்றனர். செல்லம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்குள் தரையில் சாய்ந்த நிலையில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன.
காந்திராஜன் தொல்லியல் ஆய்வாளர் : ஐந்து அடி உயரமும், 2 அடி அகலம் கொண்டதாக உள்ள நடுகல் ஒன்றில் மேல்பகுதி கோயில் கோபுர வடிவமைப்புடன், வீரன் ஒருவன் முன்னங்கால் தூக்கிய நிலையில் உள்ள குதிரை மீது அமர்ந்து ஒரு கையில் கயிற்றையும் மறுகையில் வாள் உயர்த்தி சண்டையிடுவது போலவும், தரையில் நின்றபடி வீரன் ஒருவன் தனது வாளால் குதிரையின் வயிற்றுப் பகுதியை குத்துவது போலவும், அவன் அருகில் உள்ள நாய் ஒன்று குதிரையின் அடிவயிற்றைக் கடிப்பதுபோலவும் செதுக்கப்பட்டள்ளது. அருகே பெண் கையில் ஒரு கையில் குடத்துடன் உள்ளார். மிக நேர்த்தியான வடிவமைப்பில் குதிரை,நாய், மனித உருவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சண்டையிடும் வீரனுடன் இணைந்து நாயும் குதிரையை தாக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது.
இதன் அருகிலேயே ஐந்தடி உயரமும், ஒன்றையடி அகலத்தில் உள்ள நடுகல்லில் வீரன் கையில் வில்லை ஏந்தி மறு கையில் அம்பை செலுத்த தயாரான நிலையில் இருப்பது போல கட்டப்பட்டுள்ளது. அவனுக்கு அருகே சிறிய அளவில் பெண் உருவம் ஒன்று காணப்படுகிறது. இது வேட்டை சமூகத்தைச் சார்ந்த இனக்குழுவின் பிரதிநிதி ஒருவரை காட்டும் விதமாக இருக்கிறது. மேலும் இந்தப் பகுதியில் உள்ள சில கோவில்களில் வேடன் என்ற சாமியை சிலை வைத்து வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவ்விரு நடுகற்களின் சிறபங்களின் வடிவமைப்பு வெவ்வேறு விதமாக உள்ளது. மேலும் இவை இரண்டிலும் கல்வெட்டுகள் காணப்படவில்லை. இச்சிற்ப அமைதிக் கொண்டு இவை சுமார் 400 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்ட இவ்விரண்டு சிற்பங்களும் தற்போது வழிபாட்டில் இல்லாமல் தரையில் வீழ்ந்த நிலையில் உள்ளது. சிலர் வெளியூர்களிலிருந்து இரவு நேரத்தில் வந்து வழிபடுவார்கள் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த சில இனக்குழுக்கள் ஏதோ காரணத்தால் இடப்பெயர்ச்சி செய்திருக்கக்கூடும் என்றார்.