பதிவு செய்த நாள்
12
ஆக
2023
11:08
வடவள்ளி : மருதமலையில், பிரமாண்டமான முருகன் சிலை வைப்பது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். இங்கு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், பிரமாண்ட முருகன் சிலையை அமைப்பது தொடர்பாகவும் அமைச்சர்கள் வேலு மற்றும் முத்துச்சாமி அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர். கோவை நகரில் எங்கு இருந்து பார்த்தாலும், தெரியும் வகையில் முருகன் சிலையை பிரமாண்டமாக அமைப்பது குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர்கள் விவாதித்தனர்.
மறைமுக திட்டத்தை செயல்படுத்த எண்ணமா?: மதச்சார்பற்ற அரசு என தெரிவித்துக் கொள்ளும் தமிழக அரசு, மருதமலையில் பிரமாண்ட சிலை அமைக்க முடிவு செய்துள்ளது, பல வித சந்தேகங்களை கிளப்புகிறது என ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, ஹிந்து அமைப்புகள் கூறியதாவது: அறநிலையத்துறை அமைச்சர் இன்றி, பொதுப்பணித்துறை மற்றம் வீட்டு வசதித்துறை அமைச்சர்கள் அதிகாரிகளுடன் கூடி, மருதமலையில் பிரமாண்ட சிலை வைக்க முயல்வது, வேறு ஏதேனும் மறைமுக திட்டத்தை செயல்படுத்தவோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. எனவே, மருதமலைக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை செய்து கொடுத்தாலே போதும்; இதுபோன்ற செயல்கள் வேண்டாமே. இவ்வாறு அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.