பதிவு செய்த நாள்
18
ஆக
2023
11:08
சென்னை: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நவம்பர் மாத சேவைகளுக்கான முன்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான சேவைகள் நடக்கின்றன. அவற்றில் நவம்பர் மாதம் நடக்க உள்ள சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை நவ., மாதத்திற்கான முன்பதிவு, எலக்ட்ரானிக் குலுக்கல் வாயிலாக, நாளை காலை 10:00 மணி முதல், 21ம் தேதி காலை 10:00 மணி வரை நடக்கிறது. ஆர்ஜித சேவைகளான கல்யாணம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு, வரும் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது. வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் வாயிலாக நவ., மாதம் தரிசிக்கும் சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான முன்பதிவு, வரும், 22ம் தேதி மாலை 3:00 மணிக்கு துவங்குகிறது. நவ., மாதத்திற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன், வரும், 23ம் தேதி காலை 10:00 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது.
திருப்பதி காணிக்கை; ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.4.60 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நாளில் 64,695 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களுக்கு 16மணிநேரம் காத்திருப்பிற்கு பின்பு தரிசனம் செய்தனர்.