கடைகளில் ஏற்பட்ட தீயினால் குற்றாலம் குற்றாலநாதர் கோவில் சுற்று சுவர்கள் சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2023 04:08
தென்காசி: குற்றாலம் குற்றாலநாதர் கோவில் அருகே மெயின் அருவிக்கு செல்லும் வழியில் இருந்த கடைகளில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தால் கோவில் சுற்று சுவர்கள் சேதமடைந்து காட்சியளிக்கின்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் சீசன் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த சீசன் காலங்களில் குற்றாலநாதர் கோவிலைச் சுற்றி தற்காலிக கடைகள் அமைப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுத்தவர்கள் குற்றாலநாதர் தெற்கு பிரகாரம், வடக்கு மற்றும் கீழ்பிரகாரம் பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர். விதிமுறைகள் மீறி கோவிலைச் சுற்றி இடைவெளி இன்றி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சீசன் ஜூலை மாதம் தான் துவங்கியது. ஆனால் இம்மாதம் முதல் வாரத்திலேயே சீசன் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் மிக குறைவாக தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து விட்டது. குற்றாலநாதர் கோவில் தெற்கு பிரகாரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று (ஆக.,25) பிற்பகல் 2:30 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் கடையில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். காற்று வேகமாக வீசியதாலும் தொடர்ந்து இடைவெளி இன்றி கடைகள் இருந்ததாலும் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது. தீ விபத்தில் சேதமான பொருள்களின் மதிப்பு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் கோவில் சுற்று சுவர்கள் சேதமடைந்து காட்சியளிக்கின்றது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.