நாகராஜா கோவிலில் அலைமோதிய பக்தர்கள்; பால் ஊற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2023 11:09
நாகர்கோவில்: ஆவணி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர். நாகர்கோவில் நாகாராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆவணி மாத மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நாகராஜருக்கு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பால் ஊற்றி வழிபாடு; நாகராஜா கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மஞ்சள் பொடி மற்றும் பால்ஊற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக வசதியாக கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. குடிநீர் வசதி, அன்னதானம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இதற்கிடையே கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் மாவட்ட எஸ்பி ஹரி கிரண்பிரசாத் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.