பதிவு செய்த நாள்
04
செப்
2023
12:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (4ம் தேதி) ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
அறுபடைவீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா இன்று (4ம் தேதி) அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சிம்மலக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்ட வீதி உலா நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் மணியம் ரமேஷ் மற்றும் பணியாளர்கள், மண்டகப்படி 14 ஊர் செங்குந்தர் சமுதாய உறவின் முறை பொருளாளர் மாரியப்பன், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்: வரும் 13ம் தேதி 10ம் திருவிழா அன்று திருவிழாவின்சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு சிம்மலக்கனத்தில் விநாயகர், முருகர், அம்பாள் தனித்தனி தேர்களில் தேரோட்டம் நடக்கிறது.
பூஜை நேரங்கள் மாற்றம்; திருவிழாவை முன்னிட்டு இன்று (4ம் தேதி) 1ம் திருவிழா மற்றும் 10ம் தேதி 7ம் திருவிழா அன்று கோயில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்றகால பூஜைகளும் நடக்கிறது. திருவிழாவின் மற்ற நாட்களில் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்றகால பூஜைகள் நடக்கிறது. 5ம் தேதி 2ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு உதயமார்த்தண்ட அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளைஅறங்காவலர்க்குழு தலைவர் அருள்முருகன், இணைஆணையர் கார்த்திக் மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.