மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2023 03:09
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற வதான்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காவிரியின் வடக்கு கரையில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற இத்தலம் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய மூன்றாளும் சிறந்ததாகும். இத்தலம் சப்தமாதர்களில் சாமுண்டி பூஜித்த ஸ்தலமாக கூறப்படுகிறது மேலும் நந்தி தேவருக்கு ஞானம் அளித்ததால் இத்தளத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி மேதா தக்ஷிணாமூர்த்தி என்று அழைக்கப்படுவதுடன், அனுகிரக குருவாகவும் அருள் பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் திருப்பணிகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் ஆறாம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன இன்று காலை 6 மணிக்கு எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து கடன்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தன. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரம் முழங்க தருமபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் சுவாமி அம்பாள் பரிவார மூர்த்திகள் மற்றும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சப்த மாதர்கள், வீரபத்திரர் சன்னதி விமான கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷே ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் மதுரை, சூரியனார் கோவில், துலாவூர் ஆதீன குருமகா சன்னிதானங்கள் திருப்பனந்தாள் காசி மடத்து இளைய சன்னிதானம், தருமபுரம் ஆதீன தம்பிரான்கள் சுவாமிகள், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்துராமன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை தருமபுர ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் செய்திருந்தார் கும்பாபிஷேகத்தை ஒட்டி மயிலாடுதுறை எஸ்பி. மீனா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.