பதிவு செய்த நாள்
13
செப்
2023
11:09
அவிநாசி: அவிநாசி அடுத்த சேவூர் அருகே பிரசித்தி பெற்ற, மேல திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி திருவிழா தொடங்கியது.
சேவூர் அடுத்த ஆலத்தூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி திருவிழா வாரந்தோறும் சனிக்கிழமை, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான புரட்டாசி திருவிழா செப்டம்பர் 16ம் தேதி துவங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதில், முதல் சனிக்கிழமை செப்டம்பர் 16ம் தேதி, 2ம் சனிக்கிழமை செப்டம்பர் 23ம் தேதி, மூன்றாம் சனிக்கிழமை செப்டம்பர் 30ம் தேதி, நான்காம் சனிக்கிழமை அக்டோபர் 7ம் தேதி, ஐந்தாம் சனிக்கிழமை அக்டோபர் 14ம் தேதி, 6வது சனிக்கிழமை அக்டோபர் 21ம் தேதியும், புரட்டாசி திருவிழா நடைபெறுகின்றது. இதற்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் அதிகாலை 4 மணி முதல் திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும், இரவு 7 மணிக்கு மேல் கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். கோவை, திருப்பூர், அவிநாசி, புளியம்பட்டி, நம்பியூர் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் பக்தர்களுக்காக இயக்கப்படுகின்றது. புரட்டாசி சனிக்கிழமை விழாவினை செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் குழு ஏற்பாடு செய்து வருகின்றனர்.