செங்கத்துறை மாகாளி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2023 06:09
சூலூர்: செங்கத்துறை ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த செங்கத்துறை ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த, 5 ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. கடந்த, 10 ம்தேதி விநாயகருக்கு பொங்கல் வைக்கப்பட்டது. நேற்று காப்பு கட்டுதல் நடந்தது. வானவேடிக்கை மற்றும் மேள, தாளத்துடன் அம்மை அழைத்தல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். இன்று காலை ஸ்ரீ மாகாளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வந்து பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கம்பத்தாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை மஞ்சள் நீராட்டு விழா மற்றும் கருப்பராயன் பூஜை நடக்கிறது.