பதிவு செய்த நாள்
14
செப்
2023
03:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும், 21ல் தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ., 14ல் நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, நவ., 17ல், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்குகிறது. விழாவில் நவ., 23ல், மஹா ரத ஓட்டம், 26ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான பூர்வாங்க பணிகளான விழா பத்திரிகை அச்சடித்தல், வீதி உலா வரும் பஞ்ச மூர்த்திகள் தேர் பழுது பார்த்தல், 10 நாட்கள் நடக்கும் விழாவில், வீதி உலா வரும் பஞ்ச மூர்த்திகளின் வாகனங்கள் பழுது பார்த்தல், கோவில் வளாகம் துாய்மைப்படுத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்தல் உள்ளிட்ட அனைத்து விதமான பூர்வாங்க பணிகள் தொடங்க வரும், 21ல் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.