பதிவு செய்த நாள்
14
செப்
2023
04:09
அன்னூர்: பாராளுமன்ற கட்டிடம் முன் நடராஜர் சிலை வைக்கப்பட்டது, பாரதத்தின் பெருமையை உயர்த்தியது, என பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசினார்.
கடந்த மே மாதம், டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நடந்தது. இதில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவையாதீனம் குமரகுருபர சுவாமிகள், பழனி சாது சண்முக அடிகள் ஆகியோர் பங்கேற்றனர். இத்துடன் கடந்தாண்டு காசியில் நடந்த தமிழ் சங்க விழாவில், செஞ்சேரிமலை ஆதீனம் முத்து சிவராம சாமி அடிகள் பங்கேற்றார். இந்நிகழ்வுகளில் பங்கேற்ற நான்கு ஆதீனங்களுக்கு பாராட்டு விழா பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவிலில் நடந்தது. புரவலர் குமாரசாமி தலைமை வகித்தார், நிர்வாக குழு தலைவர் ராமசாமி வரவேற்றார். பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பேசுகையில், "வழிபாடு இல்லாத கோவில்கள், பராமரிப்பு இல்லாத கோவில்கள், மடங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணியில், பேரூர் மடம் ஈடுபட்டுள்ளது. இதுவரை 16 மடங்களை சீரமைத்துள்ளோம். ஜி 20 மாநாட்டை முன்னிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் முன்பு பிரமாண்டமான நடராஜர் சிலை வைக்கப்பட்டது பாரதத்தின் பெருமையை உயர்த்தி உள்ளது. ஐந்தொழிலையும் காப்பவர் நடராஜர். நம் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தை கற்றுத் தர வேண்டும்," என்றார். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் பேசுகையில், "ஆன்மீக பணியுடன் சமுதாயப் பணியும் செய்ய வேண்டும். ரத்ததான குழு அமைத்து முகாம் நடத்த வேண்டும். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பலர் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாகவும், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவனை வாயிலாகவும் ஏராளமான உதவிகள் செய்து வருகின்றனர். ஆனால் வெளியில் தெரிவதில்லை," என்றார். விழாவில் பழனி சாது சண்முக அடிகள், தென்சேரிமலை முத்து சிவராம சாமி அடிகள், தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.