பதிவு செய்த நாள்
09
அக்
2023
01:10
பெருநகர் : காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில் நேற்று ராகு - கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று பரிகார பூஜை செய்தனர்.
நவக்கிரஹங்களில் ஒருவரான, ராகு பகவான் நேற்று, மாலை 3:40 மணிக்கு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து, கன்னி ராசிக்கும் பிரவேசிக்கின்றனர். இதையொட்டி உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், தேவகுரு, வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் சனீஸ்வரருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 1.45 மணிக்கு, ராகு, கேது மற்றும் நவ கலச ஸ்தாபனம், பெயர்ச்சி மஹா யாகம், கலச அபிஷேகம், மஹா தீபாராதனைகள் நடந்தது. ராகு கேது பெயர்ச்சியை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு உற்சவர், நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர விருட்சங்கள் அமைந்துள்ள வனத்திற்கு சென்று, 27 நட்சத்திர விருட்சங்கள் எதிரே எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில், ராகு, கேது லிங்கத்திற்கும் சிறப்பு அபிஷேக அலங்காரமும், மஹா தீபாராதனயும் நடந்தது. யாகசாலை பூஜையும், மூலவர் மாகாளேஸ்வரருக்கு கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. வெள்ளிக்கவச அலங்காரத்தில் மாகாளேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல, செவிலிமேடு கைலாசநாதர் கோவிலிலும், ராகு - கேது பெயர்ச்சி விழா நடந்தது. இக்கோவில்களில் திரளான பக்தர்கள் தீபம் ஏற்றியும், பரிகார பூஜை செய்தும் வழிபட்டனர்.