பதிவு செய்த நாள்
09
அக்
2023
01:10
பொன்னேரி: பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில் லட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, லட்சுமி நாராயண பெருமாள், லட்சுமி அம்மன் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது.முன்னதாக தடப்பெரும்பாக்கம் குளக்கரை விநாயகர் கோவிலில் இருந்து, பெண்கள் திருமண சீர்வரிசை கொண்டு வந்தனர். மங்கள வாத்தியம் முழங்க லட்சுமி அம்மன் சமேத லட்சுமி நாராயண பெருமாள் மணமேடைக்கு வந்தனர். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகம் வளர்க்கப்பட்டு சுவாமிகளுக்கு மாலை மாற்றும் வைபவமும், அதை தொடர்ந்து மாங்கல்ய தாரணமும் நடந்தது.திருக்கல்யாணத்தை தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. அப்போது, கோவிந்தா, கோவிந்தா... என, பக்தர்கள் நெஞ்சுருக பெருமானை வணங்கினர்.இரவு, 8:00மணிக்கு பெருமாளுக்கு ஊஞ்சல் சேவையும் நடந்தது, தொடர்ந்து, லட்சுமி நாராயண பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டன. தனியார் பரத நாட்டிய பள்ளி மாணவியரின் சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.