Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கணம்புல்ல நாயனார் கணம்புல்ல நாயனார் சாக்கிய நாயனார் சாக்கிய நாயனார்
முதல் பக்கம் » 63 நாயன்மார்கள்
ஆனாய நாயனார்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜன
2011
17:09

திருமங்கலம் - சோலை வளமிக்க மழ நாட்டிலே அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு பரசுதாமீசுரம் உடையார் என்றும் திருமழுவுடைய தாயனார் என்றும் சாமவேதீசுவரர் என்றும் பல திருநாமங்கள் உண்டு. தெய்வவள மிக்க இத்தலத்தில் நீடிய பெருங்குடிகளுள் ஆயர்குடி நன்றாகவும் ஒன்றாகவும் இருந்தது. அக்குலத்தின் பொன்விளக்கு  போல் ஆயனார் என்னும் அடியார் அவதரித்தார்.ஆயர் குலம் விளங்கத் தோன்றிய நாயனார் ஆனிரைகளை நிரம்பப் பெற்றிருந்தவராதலால்தான் ஆனாயர் என்னும் நாமத்தைப் பெற்றார். இவர் செயல்படுவது தம் குலத்திற்கேற்ற தொழிலாக இருந்த போதும் மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் சிவபெருமானையே எண்ணி, எந்நேரமும் உள்ளம் மகிழ்வோடு இருந்தார். ஆனாயர் வேய்ங்குழல் வாசிப்பதில் மெத்தக் கெட்டிக்காரர். ஆநிரைகளைக் காலையில் ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்ப அழைத்து வரும்போதும் வேய்ங்குழல் வாசித்துக்கொண்டேதான் இருப்பார். ஆனாயர் வேய்ங் குழலில் ஐந்து எழுத்தினை அமைத்துப் பாடும் அருந்திறனைப் பெற்றிருந்தார். ஆனாயநாயனாரின் இன்ப இசைக்கு உயிரினங்கள் அனைத்தும் மெய்மறந்து நிற்கும். ஒருநாள் நாயனார் வழக்கம்போல் ஆநிரைகளை மேய்க்கப் புறப்பட்டார். நறுமலர் மாலையை அணிந்து கொண்டார். தலையை ஒரு புறமாகக் கோதி முடிந்து அதில் கண்ணி மாலையைச் சூட்டிக் கெண்டார். செங்காந்தட் பூவினைக் காதில் சொருகிக் கொண்டார். கால்களிலே தோற்பாது கையைத் தரித்துக் கொண்டார். கையிலே வெண்கோலும் வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டார், ஏவலரும், கோபாலரும் சூழ ஆநிரைகளை ஓட்டிக்கொண்டு, முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது கார் காலம் ! முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச்சோலை போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புது மலர்களைத் தாங்கிய வண்ணம் எழிலுறக் காட்சி அளித்தன. ஆனாயர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில் - இன்பத்தை அளிக்கும் வண்ண மலர்களின் நறுவாசனையில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.

தம்மை மறந்து வேய்ங் குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி வாசித்துக் கொண்டே இருந்தார்.அப்பொழுது ஆனாயர் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.எந்நேரமும் சிவனைப் பற்றியும், திருவெண்ணீற்றை பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கும் ஆனாயர்க் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது. அத்திருத்தோற்றப் பொலிவினில், சிவனையே பார்த்து விட்டாற் போன்ற பெருமகிழ்ச்சி பூண்டார் அடியார் ! அவரது ஐம்புலன்களும் பக்தியால் பூரித்தன. ஆனாயர் அம்மரத்தை வலம் வந்து வணங்கினார். தாம் வைத்திருந்த வேய்ங்குழல் பலவற்றில் சிறந்ததான ஒன்றை எடுத்தார். ஆனாயர் பரமனை நினைத்தபடியே பண் ஒன்றை எழுப்பினார். அவர் சுத்த சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசிக்கலானார். ஐந்தொலியின் இசை இன்பம் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது. கல்லும் கரையும் தன்மை பெற்ற அவ்வின்ப இசை கந்தவர்வ கானம் போல் அமைந்தது. அருகம் புல்லை அசை போட்டபடியாக நின்று கொண்டிருந்த ஆநிரைகள் ஆனாயர் இசைக்கு மயங்கி அவரது அருகே வந்து நின்றன. கன்றுகளோ தாய்ப்பாலையும் மறந்து இன்ப இசையில் உணர்விழந்து ஆனாயரைச் சுற்றி நின்றன. மான் கூட்டங்கள் துள்ளி ஓடிவந்து ஆனாயரைச் சூழ்ந்தன. பல்வேறு ஆக்க வேலைகளில் அதிகப்படியாக ஊக்கம் காட்டி நின்ற ஆயர்கள், தங்கள் வேலைகளை மறந்து இசை வெள்ளத்தில் மூழ்கி நின்ற இடத்திலேயே செய்வதறியாது செயலற்று நின்றனர். வானவரும் விஞ்சயரும் புட்பக விமானத்தில் அமர்ந்தவண்ணம் ஆனாயரின் இசைத்தேனைச் சுவைத்துப் பருகிக்கொண்டிருந்தனர். ஆனாயர் தேவகான இசை மழை பொழிந்த வண்ணமாகவே இருந்தார். உலகில் மாறுபட்ட உள்ளத்தினரும் வாழ்வில் வேறுபட்ட நிலையில் இருப்போரும் தத்தம் நிலைமை, தகுதி இவற்றை எல்லாம் அறவே மறந்து ஒருமனப்பட்டு உள்ளம் மகிழ ஆனாயரின் இசைக்கடலில் மூழ்கி இன்பம் கண்டனர்.

தோகை விரித்தாடும் மயில் மீது படமெடுத்தாடும் பாம்புகள் மயங்கி விழுந்தன. சிங்கமும், யானையும் பகைமை மறந்து ஒன்றோடொன்று இணைந்தவாறு இசை வசப்பட்டு நின்றன. புலிகளின் முன்னே புள்ளி மான்கள் பயமின்றி நின்று கொண்டிருந்தன. காற்றுகூட வேகமாக வீசவில்லை. மரக்கிளைகள் எல்லாம் அசைவற்று இசையில் செயலற்றன. மலையிலிருந்து துள்ளிப் பாய்ந்தோடும் தேனருவிகள் எவ்வித ஓசையும் இன்றி அமைதியாக ஓடிக்கொண்டிருந்தன. அலைமோதும் கடல் கூட அமைதியுடன் காணப்பட்டது. மேகக் கூட்டங்கள் இடியும் மழையும் இன்றி வான வீதியிலே அமைதியாக ஊர்ந்து கொண்டிருந்தன. ஈரேழு உலகமும், ஆனாயரின் இசை வெள்ளத்தில் இன்ப சுகம் பெற்றன. உயிருள்ள பொருட்கள் மட்டுமல்ல உயிரற்ற பொருட்களும்கூட ஆனாயரின் குழலோசைக்குக் கட்டுப்படத்தான் செய்தன. மண்ணிலே இருந்து எழுந்த ஆனாயரின் குழலோசை மேலோங்கி விரைந்து சென்று விண்ணகத்தை முட்டியதோடல்லாமல் கயிலை மலையில் வீற்றிருக்கும் உமாமஹேஸ்வரனின் திருச்செவிகளுக்கும் ஊடுருவிற்று. வெள்ளி அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் ஆடும் அரனாரும் இசைக்குக் கட்டுப்பட்டவர்தானே !இலங்கேஸ்வரனின் இசைக்கு அடிமையானவரான அவர் இன்று ஆனாயரின் இசை வெள்ளத்திலே மெய்யுருகி ஆனாயரை ஆட்கொள்ளப் பார்வதியுடன் விடையின் மீது காட்சி அளித்தார். ஆனாயரின் இசைக்குக் கட்டுப்பட்ட கங்காதரன் ஆனாயரை வேய்ங்குழலை இவ்வாறு இசைத்துக் கொண்டே எம் அருகே வந்து அணைந்திடுவாய் என்று வாழ்த்தி அருளினார். ஆனாயர், இறைவன் அருகேயே அமர்ந்து, வேய்ங்குழல் வாசிக்கும் பேறு பெற்றார். ஆனாயர் பெற்ற பேறன்றோ அருந்தப் பேறு!

குருபூஜை: ஆனாய நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க்கடியேன்.

 
மேலும் 63 நாயன்மார்கள் »
temple

பிறையணிந்த பெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழர்களின் கொடி நிழலிலே வளம் கொழிக்கும் திருநகரங்கள் ... மேலும்

 
temple

திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், ... மேலும்

 
temple

சுந்தரர் ஜனவரி 19,2011

திருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் ... மேலும்

 
temple

உடுப்பூர் என்பது பூம்பொழில்களும், புத்தம் புது மலர்ச்சோலைகளும் சூழ்ந்த மலைவள மிக்கப் பொத்தப்பி ... மேலும்

 
temple

சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.