பதிவு செய்த நாள்
22
அக்
2023
02:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்த நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதை காரணம் கூறி வனத்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் முடியாமல் ஏராளமான வெளியூர் பக்தர்கள் மனவேதனையுடன் திரும்பிச் சென்றனர்.
இக்கோயிலில் நவராத்திரி திருவிழா அக்.15 முதல் துவங்கி 24 வரை நடக்கிறது. இதற்காக அக் 22, 23, 24 ஆகிய நாட்களில் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இரவு தங்க அனுமதி கிடையாது எனவும் வனத்துறை சார்பில் 10 நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நவராத்திரி திருவிழா தினமும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடப்பதால் இரவில் மலையில் தங்கி சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென, திருவிழா நடத்தும் ஏழூர் சாலியர் சமுதாயத்தின் சார்பில் வனத்துறை யினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அக்.22,23,24 ஆகிய 3 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்லலாம். ஆனால் இரவில் தங்க அனுமதி கிடையாது என வனத்துறை மீண்டும் தெரிவித்தது. இந்நிலையில் ஏழூர் சாலியர் சமுதாயத்தின் சார்பில், கோயிலில் இரவில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இறுதியான உத்தரவுகள் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அக். 22, 23, 24 தேதிகளில் பக்தர்கள் மலையேற அனுமதித்த தனது உத்தரவை ரத்து செய்து புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப் குமார் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவு மதுரை, விருதுநகர் கலெக்டர்கள், அறநிலையத் துறை இணை இயக்குனர், வனச்சரகர்கள், நவராத்திரி குழு தலைவர் சடையாண்டி ஆகியோர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் ஏற்கனவே தெரிவித்த வனத்துறையின் அறிவிப்பினை நம்பி நேற்று காலை 6:00 மணி முதல் ஏராளமான வெளியூர் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். ஆனால், அவர்களை மலையேற வனத்துறை மற்றும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பல மணி நேரம் காத்திருந்த காத்திருந்த வெளியூர் பக்தர்கள் மிகுந்த மனவேதனையுடனும், ஏமாற்றத்துடனும் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் தாணிப்பாறைக்கு செல்லும் வத்திராயிருப்பு விலக்கு ரோடு மற்றும் மகாராஜபுரம் விலக்கு வழிகளிலும், மலை அடிவாரத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, கோயிலுக்கு வந்த பக்தர்களை தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர்.