பதிவு செய்த நாள்
24
அக்
2023
08:10
தேவி மகிஷாசுரனை வதம் செய்ததை விஜயதசமி என்கிறோம். வடநாட்டில் இது சீமல், லோங்கனம் என்று அழைக்கப்படுகிறது. சீமல் லோங்கனம் என்ற சம்ஸ்க்ருத வார்த்தைக்கு எல்லையைக் கடத்தல் என்று பொருள் மராட்டி மொழியில் இது திரிந்து சீலங்கன் என்று கூறப்படுகிறது. அரசர்கள் விஜயதசமியன்று, கோலாகலமான ஊர்வலமாக எல்லையைக் கடந்து சென்று எதிரிகளை வெல்லும் அறிகுறியாக சில அம்புகளை எய்துவிட்டு திரும்புவார்கள். இது ஓர் அரச தர்மம், துறவிகளும், விஜய தசமியன்று சாதுர்மாஸ்ய (மழைக்கால) விரதத்தை முடித்ததற்கு அறிகுறியாக ஸ்ரீமத் பகவத்கீதையை பாராயணம் செய்து கொண்டே நடந்து சென்று, அவர்கள் தங்கியிருந்த ஊரின் எல்லையைத் தாண்டியபிறகு, திரும்பி வரவேண்டும் என்பது சாஸ்த்ரவிதி. ஆகவே விஜயதசமியன்று நடக்கும். இந்த சீமல்லோங்கணம் அல்லது சிலங்கன் என்ற வார்த்தைக்கு எல்லையைக் கடத்தல் என்று அர்த்தம்.
1916ம் ஆண்டு (பாபா மகாசமாதி அடைந்த 1918ம் ஆண்டிற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு), இது விஜய தசமி நாளன்று, சாயங்காலம், பிரதோஷ நேரத்தில், பின்னர் நடக்கப் போவதை சூசகமாக அறிவித்தார். 1916ம் ஆண்டு விஜயதசமி நாளன்று மாலை வேளையில் பாபா கடகடவென்று இடியிடிக்கும். கரிய மேகங்கள் போல் உரத்த குரலில் பேசினார். தலையைச் சுற்றி தான் எப்போதும் கட்டிக் கொண்டிருக்கும் துணியை அவிழ்த்தார். சரக்கென்று கப்னியை (மேலாடை) கழற்றினார். லங்கோட்டை அவிழ்த்தார். மூன்றையும் தன் முன்னால் எரிந்து கொண்டிருந்த துணியில் போட்டார். ஏற்கெனவே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த துனிக்கு. மேலும் ஆஹுதியாக (படையலாக) இவை அளிக்கப்பட்டன. தீஜ்வாலை மேலும் ஆவேசத்துடன் உயரமாக எழுந்தது. அக்னி பிரகாசமாக எரிந்தது. பாபாவின் முகம் அந்த பிரகாசமான நெருப்பு ஒளியில் மேலும் பிரகாசமாகத் தெரிந்தது.
பாபா உயர்ந்த குரலில் கூறினார். இப்பொழுது என்னை நன்றாக பார்த்துக் கொண்டு நான் இந்துவா அல்லது முகம்மதியரா என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள் என்றார். மக்கள் அவரிடம் நீங்கள் இந்துவா அல்லது முகம்மதியரா, உயர்ந்த குலத்தில் பிறந்தவரா, தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவரா என்று அடிக்கடி கேட்டுக் கேட்டு அவர் மனதை காயப்படுத்தியது. அந்தக் குரலில் தெரிந்தது.
பாகோஜி என்ற அடியவர் பாபாவின் அருகில் தைரியமாக வந்தார். அவர் பாபாவின் இடுப்பில் ஒரு புதிய கோட்டை கட்டினார். பாகோஜி பாபாவிடம் கேட்டார்... பாபா! என்ன இதெல்லாம்... நல்ல நாளும் அதுவுமாக!... இன்று சீமங்கல்லோகன நாள் என்று தங்களுக்குத் தெரியாதா? பாபா தன் கையிலிருந்த சட்கா என்ற கம்பை தரையில் அடித்தபடி இதுதான் என் சிலங்கண் என்றார். இவ்வாறு பிறவிக் கடலின் எல்லையைத் துறக்க விஜயதசமிதான். சிறந்த காலம் என குறிப்பால் உணர்த்தினார். 1918ம் ஆண்டு விஜயதசமி நாளன்று தன் ஆத்மா கடல் என்னும் எல்லையைக் கடக்கப் போகும் நாள் என மறைமுகமாக உணர்த்தினார். 1916ம் ஆண்டு விஜயதசமி நாளன்று தன் உடைகளை, துனிஎன்னும் ஹோமத்தீயில் எரித்த மாதிரி, இரண்டாண்டுகள் சென்று 1918ம் ஆண்டு விஜயதசமி நாளன்று தன் தேகமென்னும் ஆடையை யோகமென்னும் அக்னிக்குப் படையலிட்டார். எல்லையைக் கடக்கும் சீமல் லோங்கனம் என்ற விஜய தசமி நன்னாளில் தன் ஆத்மாவை, உடலென்னும் எல்லையைக் கடக்கச் செய்து, மெய்ப் பொருளோடு ஒன்றானார்.