திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 13ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2023 11:11
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் முதன்மை பெற்றது கந்தசஷ்டி திருவிழாவாகும். இந்த விழா வரும் 13.11.2023 அன்று துவங்கி 24.11.2023வரை நடக்கிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்தி முடிப்பது சம்பந்தமாக அரசுத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் லட்சுமிபதி ஆலோசனை நடத்தினார். பின், கலெக்டர் கூறியதாவது; கந்தசஷ்டி திருவிழா காலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அதற்கு ஏற்ப தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். தற்காலிக பஸ் ஸ்டாண்ட், தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து ஆர்.டி.ஓ. கண்காணிக்க வேண்டும். அவசரகால நேரங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். விழாவின் இறுதிநாளில் திரும்ப வரும் வாகனங்கள் நெரிசலின்றி வெளியே செல்ல தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். ஆட்டோ மற்றும் திறந்தவெளி வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்ல தடை செய்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.