பதிவு செய்த நாள்
09
நவ
2023
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜ கோபுரத்தை வழிபட முடியாத அளவிற்கு இடையூறாக, வணிக வளாகம் கட்டும் பணிக்கு, பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பக்தர்களுக்கு ஆதரவாக, பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கோவில் நிர்வாகத்தை கண்டித்து, போராட தயாராகி வருகின்றனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தருகின்றனர். இவ்வளவு சிறப்பு மிக்க அருணாசலேஸ்வரர் கோவில், 25 ஏக்கர் பரப்பளவில், 6 பிரகாரங்களுடன், 9 கோபுரங்கள், கோவிலினுள் 93 சன்னதிகள், 1,000 கால் மண்டபம், 2 குளங்கள் மற்றும், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட, 2,668 அடி உயர அண்ணா மலையார் மலை, அஷ்டலிங்கங்களுடன் கோவில் அமைப்பு உள்ளது.
கோபுர தரிசனம்; கோவிலில் நுழைவு வாயிலாக அமைந்துள்ள, ராஜகோபுரம், 11 நிலைகளுடன், 217 அடி உயரம் கொண்டது. ‘கோபுர தரிசனம், கோடி புண்ணியம்’ என்பதால், 20 கி.மீ., துாரம் வரை தெரியும் இந்த ராஜகோபுரத்தை, கோவிலிற்கு தினமும் வர முடியாத பக்தர்கள் மற்றும் 20 கி.மீ., துாரம் வரை உள்ள கிராமத்திலுள்ள ஏராளமான பக்தர்கள் தினமும் காலையில் எழுந்து, ராஜகோபுரத்தை கை கூப்பி தொழுது வணங்கி பணியை தொடங்குவர். இந்த கோபுரம், தீப திருவிழா காலங்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் 20 கி.மீ., துாரம் வரை, பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியளிக்கும். தற்போது பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், கோவிலினுள் செல்ல முடியாத பல லட்சக்கணக்கான பக்தர்களை, தொலைவில் இருந்து ராஜகோபுரத்தை பார்த்து தரிசனம் செய்து கிரிவலம் செல்வர்.
அடுக்குமாடி கட்டடம்; இவ்வளவு சிறப்பு மிக்க ராஜகோபுரம் எதிரில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், 8 அடி உயரத்தில் கோபுரங்கள் மறைக்காத அளவிற்கு, 50க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்காக சிறிய அளவிலான கடைகள் கட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் வாடகைக்கு விடப்பட்டன. இந்நிலையில் அக்கடைகளை தற்போது இடித்து விட்டு, 6,500 சதுர அடியில், 151 கடைகளுடன், 30 அடி முதல், 40 அடி வரை உயரத்திற்கு, 3 மாடி அளவிற்கு, 6.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி வணிக வளாக கட்டடம் கட்டுதவற்கான பணியை, கடந்த மாதம், 20ம் தேதி அமைச்சர் வேலு, கால்கோள் விழாவுடன் தொடங்கி வைத்தார். தற்போது வணிக வளாகம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வணிக வளாகம் கட்டினால், கோபுரத்தின் முன்பகுதி மறைக்கப்பட்டு, பக்தர்கள் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மூடி மறைப்பு; இதற்கு பக்தர்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், வணிக வளாக கட்டடத்தின் புளூ பிரிண்ட் எனப்படும், மாதிரி கட்டட அமைப்பை, இதுவரை கோவில் நிர்வாகம் வெளியிடாமல், பக்தர்களுக்கு, இது குறித்து முழு விபரங்களை தெரிவிக்காமல், மூடி மறைத்து வருகிறது. கோவில் வழிபாட்டு தலத்தை வணிக வளாகமாக மாற்றும் செயலால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கோவில் நிர்வாக செயல்பாட்டை கண்டித்து, போராட்டங்கள் நடத்த தயாராகி வருகின்றனர்.