பதிவு செய்த நாள்
26
நவ
2023
11:11
பழநி: பழநி கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் மலைக்கோயிலில் மஹாதீபம், சொக்கப்பனை ஏற்றப்பட்டது
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.20 சாயரட்சை பூஜையில் மூலவர், சண்முகர், சின்ன குமாரசுவாமி காப்பு கட்டுதலுடன் துவங்கி, தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, தீபாராதனை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, யாகசாலை தீபாராதனை, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. டிச.5., ல் சாயரட்சை பூஜைக்கு பின் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருக்கார்த்திகை தினமான (நவ.26.,) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 4:30 மணிக்கு விளா பூஜை நடை பெற்றது. மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல குடமுழுக்கு நினைவரங்கம், வழியாக மேலே செல்லவும், படிப்பாதை வழியாக கீழே இறங்கி செல்லவும் பயன்படுத்தினர். குடமுழுக்கு நினைவரங்கம் வழியை மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பக்தர்கள் மலைக்கோயில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரோப்கார், வின்ச் வழக்கம் போல் இயங்கியது. மலைக்கோயிலில் மதியம் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, சாயரட்சை பூஜை நடந்தது. சின்னகுமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். யாகசாலை, பிரகாரம் வலம் வந்து தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருளினார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெற்றது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீப ஸ்தம்பத்தில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு நேற்று மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறவில்லை.
மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகாதீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது. காலை முதல் கிரிவீதி, சன்னதி வீதி மலைக்கோயில் ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் இணை ஆணையர் மாரிமுத்து உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கார்த்திகை திருநாளை முன்னிட்டு பக்தர்கள் வருகையால் இருந்ததால் கோயிலில் கூட்டம் அதிக அளவில் இருந்தது. அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு மற்றும் பழநியின் முக்கிய சாலைகளான காந்தி ரோடு, புது தாராபுரம் ரோடு சந்திப்பு, ஆர்.எப்.ரோடு திண்டுக்கல் ரோடு சந்திப்பு ஆகியவற்றில் வாகன நெரிசல் அதிகளவில் இருந்தது. சன்னதி வீதி, கிரிவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பால் தொல்லை அதிகம் இருந்தது இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.