பதிவு செய்த நாள்
04
டிச
2023
04:12
சென்னை : சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அறநிலையத் துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, தாக்கல் செய்த மனு: மாநில அளவிலான நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள், பல துாண்களை சேதப்படுத்தி உள்ளனர். கோவிலுக்குள் ஏராளமான அறைகள் கட்டப்பட்டு உள்ளன. 100 ஆண்டுகள் பழமையான மரங்களை வெட்டியுள்ளனர்; டன் கணக்கில் மணல் எடுத்துள்ளனர். அனுமதி பெறாமல், கோவிலுக்குள் எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். தணிக்கை மேற்கொள்ள கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மனு, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ராஜகோபுரம் அருகில், தோண்டும் பணி நடக்கிறது. நுாற்றுக்கணக்கான லாரிகளில் மணல் எடுத்து செல்லப்பட்டுள்ளது. கோவிலை தனியார் சொத்து போல, பொது தீட்சிதர் குழு கருதுகிறது. கட்டுமானங்களை நிறுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியும் பணி தொடர்கிறது. எனவே, கட்டுமானம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், என்றார்.
அத்துடன், கோவிலுக்குள் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களுக்கு, புகைப்பட ஆதாரங்களை தாக்கல் செய்தார். புராதன பாதுகாப்பு அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமமூர்த்தி, பழமையான கோவில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வேண்டும், என்றார். அருண் நடராஜன் தாக்கல் செய்த புகைப்பட ஆதாரங்களை பரிசீலித்த நீதிபதிகள், கோவிலுக்குள் எப்படி கட்டுமானம் நடந்தது; எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. பழமையான கோவில்களை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. தேவைப்பட்டால், மாவட்ட நீதிபதியை நியமித்து ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிடுவோம் என்றனர். பொது தீட்சிதர்கள் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிசங்கரிடம், நாங்கள் தடை விதிக்கவா அல்லது நீங்கள் உத்தரவாதம் அளிக்கிறீர்களா என்றும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து, சட்டவிரோதமாக கட்டுமானம் நடக்கவில்லை; மேற்கொண்டு கட்டுமானம் செய்ய மாட்டோம் எனவும், அவ்வாறு நடந்தால், உடனடியாக நிறுத்தப்படும் என, பொது தீட்சிதர்கள் குழு உத்தரவாதம் அளிப்பதாக, வழக்கறிஞர் ஹரிசங்கர் தெரிவித்தார். உத்தரவாதத்தை பதிவு செய்த பின், விசாரணையை வரும் 6ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.