பதிவு செய்த நாள்
15
டிச
2023
08:12
சபரிமலை; சபரிமலையில் தினசரி ஆன்லைன் முன்பதிவு 80 ஆயிரமாகவும், ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சபரிமலையில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு வாராமாக சபரிமலையில் பக்தர்கள் மிக மோசமான சிரமங்களை சந்தித்தனர். காடுகளிலும், செட்டுகளிலும் 12 முதல் 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் நடத்தினர். பக்தர்கள் கூட்டம் காரணமாக சபரிமலை ரோடுகள் ஸ்தம்பித்ததால் கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் சர்வீஸ் முடங்கியது. இதனால் நிலக்கல்– பம்பை இடையே சென்று வருவதில் பக்தர்கள் பெரும் கஷ்டத்தை சந்தித்தனர். 50 பேர் பயணம் செய்யும் பஸ்சில் 250 பேரை அடைத்து கொண்டு சென்றனர். கேரளா மட்டுமல்ல பல தென் மாநிலங்களிலும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் எழ தொடங்கியது. கேரளாவில் ஆளும் மா.கம்யூ., அரசு சபரிமலையை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது. காங்., பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசை கடுமையாக சாடியது.
இதனால் முதல்வர் பினராயி விஜயனின் நவகேரள யாத்திரையில் பங்கு கொண்டிருந்த தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவோடு இரவாக சபரிமலை வந்தார். இங்கு நிலக்கல், பம்பை, சரங்குத்தி கியூ காம்ப்ளக்சை பார்வையிட்ட பின்னர் 18 படிகளில் பக்தர்கள் ஏறுவதை பார்த்தார். பின்னர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கடந்த நாட்களில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள இனி வரக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். கடந்த ஒரு வாரம் நடைபெற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு கேரள உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் படி தினசரி ஆன்லைன் முன்பதிவு 80 ஆயிரம், ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரம் என கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அடுத்த நாள் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். கேரள போலீஸ் டி.ஜி.பி. சபரிமலை நிலவரத்தை கண்காணிக்க வேண்டும். நிலக்கல்லில் கூடுதல் வாகனங்களை பார்க்கிங் செய்ய வசதி செய்ய வேண்டும். முன்பதிவு எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடக்கும போது ஹில்டாப்பில் வாகனங்களை பார்க்கிங் செய்யலாம்.
இந்த உத்தரவு படி பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று முதல் சபரிமலை பாதைகளில் இயல்பு நிலை திரும்பியது. சபரிமலை ரோடுகளில் வாகனங்கள் தடுக்கப்படவில்லை. நிலக்கல்லில் இருந்து பஸ்கள் முறையாக இயக்கப்பட்டது. எனினும் பம்பையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இனி வரும் நாட்களில் கூட்டம் அதிகமாகி பம்பையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தும் போது அது பற்றி நிலக்கல்லில் பக்தர்களுக்கு எல்லா மொழியிலும் அறிவிப்பு வெளியிடப்படும். சென்னை மழை, தெலங்கானா தேர்தல் காரணமாக ஒரே நேரத்தில் அதிக பக்தர்கள் வந்ததுதான் பிரச்னைகளக்கு காரணம் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். இனி வரும் நாட்களில் தேவசம்போர்டின் நிர்வாகி சன்னிதானத்தில் இருந்து நிலைமையை கவனித்து நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிவித்தார். தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், பம்பையில் பக்தர்கள் காத்து நிற்க தற்காலிக நிழல் கொட்டகை அமைக்கப்படும் என்றும், இனி பக்தர்கள் வழிகளில் தடுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த இடத்தில் உணவு, குடிநீர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.