சபரிமலை ஐயப்பனுக்கு மண்டல பூஜை; பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட பக்தர்களின் கியூ
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2023 07:12
சபரிமலை : சபரிமலையில் நேற்று(டிச.,26) மாலை ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கார்த்திகை ஒன்றாம் தேதி துவங்கிய மண்டல காலம் நாளை(டிச.,28) நிறைவு பெறுகிறது. மண்டல பூஜை நாளில் ஐயப்ப சுவாமி விக்ரகத்தில் அணிவிப்பதற்காக மறைந்த திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா 450 பவுன் எடையில் தங்க அங்கியை காணிக்கையாக வழங்கினார். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த தங்க அங்கி டிச. 23-ல் பவனியாக புறப்பட்டது. பல்வேறு இடங்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு பின்னர் நேற்று மதியம் பம்பை வந்தடைந்தது. மதியம் 3:00மணிக்கு அங்கி பேடகத்தில் வைக்கப்பட்டு தலை சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்த தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து மேளதாளம் வழங்க பெரிய நடைபந்தல் வழியாக 18படி ஏறி ஸ்ரீ கோயில் முன் கொண்டு வரப்பட்டது. கொடிமரம் அருகே கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தேவசம் போர்டு தலைவர் பி.என்.பிரசாந்த் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து ஸ்ரீ கோயில் முன் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்று நடை அடைத்த பின்னர் அந்த அங்கியை ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்தனர். தொடர்ந்து நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இன்று(டிச., 27) காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் மண்டல பூஜை நடக்கிறது. கலசாபிஷேகம் முடிந்து களபாபிஷேகம் நடத்திய பின் ஐயப்பன் விக்கிரகத்தில் தங்க அங்கி மீண்டும் அணிவிக்கப்படும். நாளை இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும். டிச., 30 மாலை 5:00 மணிக்கு மகரவிளக்கு சீசனுக்காக நடை திறக்கப்படும். சபரிமலையில் நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்களின் நீண்ட கியூ காணப்பட்டது. நேற்று மதியம் 12:00 மணிக்கு பின்னர் பக்தர்கள் பம்பையில் தடுக்கப்பட்டனர். தங்க அங்கி சரங்குத்தி கடந்த பின் மாலையில் மீண்டும் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.