சுவாமிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 03:01
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புடையதும், தந்தையாகிய சிவபெருமானுக்கு மகன் முருகப்பெருமான் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த தலமாக சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஓவ்வொரு ஆண்டும் தைப்பூச விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நிகழாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, பத்து நாள் உற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.அப்போது உற்சவரான வள்ளி- தெய்வாணையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மங்கள வாத்தியம் முழங்க விழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து உற்சவ பஞ்சமூர்த்தி சுவாமிகள் மலைக்கோவிலிருந்து கீழே இறங்கி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து வரும் 26-ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் சுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசம் நாளன்று வருகிற ஜன.25-ம் தேதி, காலை 10 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலாவும், தொடர்ந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறவுள்ளது.