திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கவர்னர் ரவி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2024 03:01
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் இன்று காலை 10:00 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வது திகழ்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவருடைய மனைவி லட்சுமி ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வருகை தந்தனர். ராமநாதபுரம் சமஸ்தானம் ரஞ்சனா நாச்சியார், தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், ரகுபதி ஐயங்கார், செயல் அலுவலர் கிரிதரன் மற்றும் கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், தர்ப்ப சயனராமர், சந்தான கோபால கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர் ஆகியோரது சன்னதியில் சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோசாலையில் இருந்த பசுக்களுக்கு அகத்திக் கீரையை மனைவி லட்சுமி உடன் சேர்ந்து வழங்கினார். சிறப்பு தரிசனத்தை முன்னிட்டு தர்ப்பசயன ராமருக்கு முத்தங்கி அலங்கார சேவை நடந்தது. கீழக்கரை டி.எஸ்.பி.சுதிர்லால் தலைமையில் திருப்புல்லாணி கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து திருப்புல்லாணி கிழக்குச் கடற்கரை சாலை முதல் ராமநாதபுரம் வரை வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காலை 10:45 மணியளவில் ராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுச் சென்றார். திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, பி.டி.ஓ., ராஜேஸ்வரி, மணிவண்ணன் மற்றும் பா.ஜ.,ஆன்மீகப்பிரிவு மாவட்ட தலைவர் பழனிக்குமார் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.