பதிவு செய்த நாள்
22
ஜன
2024
04:01
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், புனரமைப்பு செய்த தேர் வெள்ளோட்டம் நடந்தது. நாளை தைப்பூச கொடியேற்றம் நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையத்தில், பவானி ஆற்றின் கரையில், மிகவும் பழமையான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டது. 2012ம் ஆண்டிலிருந்து கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றதால், தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை. கடைசியாக, 2011ம் ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடந்தது. 2022ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல், ஒரே இடத்தில் தேர் நிறுத்தி இருந்ததால், தேர் சக்கரங்கள் பழுதடைந்தன. இதனால் கடந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறவில்லை. உபயதாரர்களின் நிதி உதவியோடு, 10 லட்சம் ரூபாய் செலவில், நான்கு சக்கரங்கள், இரண்டு சட்டங்கள் புதிதாக செய்து, தேரில் பொருத்தப்பட்டது. புனரமைப்பு செய்த தேர் வெள்ளோட்டம் நடந்தது. சிறப்பு பூஜையில், அலங்காரம் செய்த கும்பத்தை, புதிய தேரின் மீது வைத்தனர். பின்பு தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோவை சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வடம் பிடித்து, தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் ரமேஷ், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, பரம்பரை அறங்காவலர் வசந்தா, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தீயணைப்பு அலுவலர் பாலசுந்தரம் உள்பட முக்கிய அதிகாரிகள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நாளை கொடியேற்றம். இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளதை அடுத்து, நாளை (23ம் தேதி) காலை, 11:00 மணிக்கு கொடியேற்றமும், 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது. 25ம் தேதி பிற்பகல், 12:15 மணிக்கு அலங்காரம் செய்த தேருக்கு, வள்ளி, தெய்வானை சமேதராக, சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளுகிறார். தேரோட்டம், 12 ஆண்டுகளுக்கு பிறகு, அன்று மாலை, 3:15 மணிக்கு நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர்கள் செய்து வருகின்றனர்.