பதிவு செய்த நாள்
28
ஜன
2024
10:01
கோவை:அயோத்தி ராமபிரானுக்கு இணையாக, வேறு எந்த தெய்வமுமில்லை. அவருக்கு இணை அவரே, என்று கோவை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை வைபவத்தில் பங்கேற்ற அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நகரே, தெய்வீகத்தன்மை வாய்ந்த நகரமாக இருந்ததை பார்க்கவும், உணரவும் முடிந்தது. நம் தேசத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அனைவரும், எப்படியும் ராமர்கோவில் அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடனும், கனவுடனும் வாழ்ந்து மறைந்தனர். அந்த புண்ணிய ஆத்மாக்களின் கனவும், தற்போதுள்ள பக்தர்களின் நம்பிக்கையும் நிறைவேறி உள்ளது, மனமகிழ்வை தருகிறது.
குஜராத்தில் உள்ள சுவாமி நாராயணன், பஞ்சாபில் உள்ள பொற்கோவில், ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி, கேரளாவில் உள்ள குருவாயூர், பத்மநாபசுவாமி என்று நம் நாட்டில் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு புகழ் இருக்கும். ஆனால் அயோத்தியில் அமைந்துள்ள ராமபிரானுக்கு இணையாக, வேறு எந்த தெய்வமுமில்லை; வேறு கோவிலுமில்லை. அவருக்கு இணை அவரே. அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பழமை மாறாமல் கோவிலை அமைத்துள்ளனர். நம் நாட்டின் மிகப்பெரிய அடையாளமாக அயோத்தி ராமர் கோவில் திகழும். இவ்வளவு ஆண்டுகளுக்கு பின், அமைக்கப்பட்ட ராமர் கோவிலில் பல கோடிக்கணக்கான மக்களின் உழைப்பு இருப்பதால், அந்த கோவிலில் தெய்வீகம் என்ற உயிர்ப்பு உள்ளது. இவ்வாறு, சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறினார்.