காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா; மார்.,3ல் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 03:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் மார்ச் 3ம் தேதி கண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது என்று கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.வி.நாகேஸ்வர ராவ் தெரிவித்தார். மேலும் பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள் 3.3.2024 மாலை 4 மணிக்கு கோயில் அருகில் உள்ள கண்ணப்பர் மலை மீது உள்ள கண்ணப்பர் கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெறும். தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும். 2ம் நாள் 4.3.24 அன்று காலை 9 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும். பகல் 12:30 மணி முதல் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் கோயிலுக்குள் நடைபெறும். மேலும் இரவு ஒன்பது மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் சாமி அம்மையார் ஊர்வலம் நடைபெறும்.
3ம் நாள் 5.3.24 காலை 10 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 4 மாத வீதிகளில் ஊர்வலம் நடைபெறும். இரவு 9 மணிக்கு பூத வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் ( சூக) கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும். மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் நான்காவது நாள் 6.3.24 அன்று காலை 9 மணிக்கு அன்னபக்ஷி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம். இரவு ராவண வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் (மயூர) மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம்.
5ம் நாள் 7.3.24 அன்று காலை 9 மணிக்கு அம்ச வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம். இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் யாளி வாகனத்தில் ஞான பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம். பிரம்மோச்சுவிழாவின் ஆறாவது நாள் 8.3.24 அன்று மகா சிவராத்திரி காலை 9 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 4 மாட விதிகளில் ஊர்வலம் அன்று இரவு 10 மணிக்கு சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வாகனமான நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் மிகப் பிரமாண்டமாக வீதி உலா நடைபெறும்.
7ம் நாள் 9.3.24 அன்று காலை பதினோரு மணிக்கு தேர் திருவிழா இரவு 9 மணிக்கு கோயில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் (குளத்தில் ) தெப்போற்சவம் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின் 8ம் நாள் காலை 9 மணிக்கு அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் சிம்ம வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் (மணமக்கள் அலங்காரத்தில்) கோயிலில் இருந்து சிவன் கோயில் திருமண மண்டபம் வரை ஊர்வலம் ஆக செல்வர் அங்கு நள்ளிரவிற்கு பின் சிவ- பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் 11.3.24 அன்று அதிகாலை மூன்று மணிக்கு சாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் தொடர்ந்து 11 மணிக்கு ருத்ராட்ச அம்பாரி வாகனங்களில் (புது மணமக்கள் அலங்காரத்தில்) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் வெவ்வேறு இரண்டு ருத்ராட்ச அம்பாரிகளில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோயில் வரை ஊர்வலம் நடைபெறும். இரவு 8 மணிக்கு (சபாபதி) நடராஜர் திருக்கல்யாண உற்சவம் கோயில் வளாகத்தில் நடைபெறும்.
10 ம் நாள் 12.3.24 காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரி வாகனங்களில் கைலாச கிரிவலம் நடைபெறும் இரவு 9 மணிக்கு (அஸ்வம் )குதிரை வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும். 11நாள் 13.3.24 அன்று காலை 10 மணிக்கு கேடிக வாகனங்களில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 4 மாட வீதிகளில் ஊர்வலம் பகல் 12:30 மணிக்கு கோயிலில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் இருந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் காளஹஸ்தீஸ்வரரும் காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் 4 மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெறும்.
12ம் நாள் 14.3.24 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பல்லக்கு சேவை 13 ஆம் நாள் 15.3.2024 அன்று இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து 16.3.2024 அன்று காலை 10 மணிக்கு கோயிலில் சாந்தி அபிஷேகங்களுடன் சாமி அம்மையார்களின் பிரம்மோற்சவ விழா நிறைவுபெறும் என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வித்தியாசமாக விழாவை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.வி.நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.