பதிவு செய்த நாள்
29
பிப்
2024
11:02
பழநி; பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்கு ரத வீதி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் நேற்று (பிப்.28)ல் தேரோட்டம் நடைபெற்றது.
பழநி, கோயில் நிர்வாகத்தின் உபகோயிலான மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா பிப்,.9ல் மூகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது. பிப்.,13,ல் கோயில் முன் கம்பம் நட்டனர். பிப்.,20 கொடியேற்றம் நடைபெற்று, கோயில் முன் வைக்கப்பட்ட கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. பக்தர்கள், கம்பத்திற்கு பால், பன்னீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பிப்.21ல் அடிவாரம், குமாரசத்திரம் அழகு நாச்சியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தங்க குதிரை, புதுச்சேரி சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி ரிஷபம், வெள்ளி யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பட்டு நடைபெற்று வருகிறது. பிப்.,27 மாலை 4:30 மணிக்கு பொட்டும், காரையும் கொண்டு வருதல் நடந்து, மாரியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. (பிப்.,28 ல்) நேற்று காலை பாதிரி பிள்ளையார் அம்மன் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. திருத்தேரில் மாரியம்மன் எழுந்தருளல் நடைபெற்றது. மாலை 4:27 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு, திருத்தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் பக்தர்களின் ஓம் சக்தி, பராசக்தி கோசத்துடன் நடந்தது. கோயில் யானை கஸ்தூரி தேர் பின்னே ஒய்யாரமாய் நடந்து வந்தது. மாலை 5:58 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு வண்டி கால் பார்த்தல், சக்தி கரகம், திருக்கம்பத்தை கங்கையில் சேர்த்தல் நிகழ்வுகள் நடைபெறறன. இன்று (பிப்.,29 ) கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைய உள்ளது. தேரோட்டத்தில் கோயில் துணை கமிஷனர் வெங்கடேஷ், உதவி கமிஷனர் லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.