சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா; தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29பிப் 2024 12:02
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு இணையான தலங்களில் முதன்மையான இக்கோவிலில் சிவமூர்த்தி, அம்பாள், தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது. இது நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திர திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இந்திர பெருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகன், பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேவேதாரனேஸ்வரர் சுவாமிகள் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தேரின் முன்பு கூடிய திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை தேர் நிலையை வந்து அடையும். இந்த தேரோட்ட விழாவில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மார்ச் 3ஆம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.