காஞ்சி மஹாபெரியவர் மகிமை; குருவருளால் குறை தீர்ந்தது..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 03:03
காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை கைத்தாங்கலாக இரு இளைஞர்கள் அழைத்து வந்தனர். ‘‘சிரமத்துடன் இவரை ஏன் அழைத்து வருகிறீர்களே’ என மடத்தின் சிப்பந்திகள் கேட்டனர். இளைஞரில் ஒருவர் இந்த மூதாட்டிக்கு பார்வை போய்விட்டது. வைத்தியம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஆனால் பார்வை இல்லையே என்ற மனக்குறை பாட்டிக்கு நீங்கவில்லை. இவரது ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர் ஒருவர், ‘முன்னோர் சாபமே காரணம். பரிகாரமாக புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்யுங்கள்’ என்றார். அதன்படி கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்செந்துார் என பல கோயில்களை தரிசித்தோம். கடைசியாக நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதரை தரிசித்தோம். அங்கு பக்தர் ஒருவர் இந்த பிரச்னையை கேட்டு விட்டு, ‘இத்தனை கோயிலுக்கும் போய் தரிசித்தது நல்லதுதான். இருந்தாலும் கடவுளின் அருளை குருநாதரின் மூலமாக பெற முடியும். வைத்தீஸ்வரரை தரிசித்த கையோடு காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரை தரிசியுங்கள்’ என்றார். அதைக் கேட்டுத்தான் இங்கு வந்தோம்’’ என்றனர்.
இப்படி சொல்லிக் கொண்டே மஹாபெரியவரிடம் அழைத்துச் சென்றனர். பாட்டியை உற்று நோக்கிய மஹாபெரியவர் அருகில் நின்ற சிப்பந்தியிடம், ‘டார்ச் லைட்டை எடுத்துட்டு வா’ என்றார். அதை அவர் கொடுத்ததும் தன் முகத்தை நோக்கி லைட்டை அடித்தார். தவவலிமையால் பிரகாசிக்கும் சுவாமிகளின் முகம் டார்ச் வெளிச்சத்தில் இன்னும் ஜொலித்தது. இதைப் பார்த்த மூதாட்டி ‘மஹாபெரியவரின் முகம் பளிச்சென்று கண்ணுக்குத் தெரிகிறதே’ என மகிழ்ந்தார். இதைக் கேட்டு இளைஞர்களும் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களுக்கு குங்குமப் பிரசாதம் தரப்பட்டது. குருவருளின் மகிமையால் விதியின் கொடுமை நீங்கியதை எண்ணி மனநிறைவுடன் புறப்பட்டனர்.