பதிவு செய்த நாள்
25
மார்
2024
08:03
பழநி: பங்குனி உத்திர விழாவை யொட்டி, பழநி மலைக்கோவிலில், தீர்த்தக் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள், நான்கு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து, மலைக்கோவிலில் உள்ள மூலவர் ஞான தண்டாயுத பாணிக்கு அபிஷேகம் செய்வர். நேற்று, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், சுற்றுலா பயணிகள் மற்றும் தீர்த்தக் காவடிகளுடன், ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். வின்ச், ரோப்கார் ஸ்டேஷனில், இரண்டு மணிநேரம் காத்திருந்து மலைக்குச் சென்றனர். அங்கு தீர்த்த காவடிக்கு முன்னுரிமை அளித்து, தனிவரிசை அமைக்கப்பட்டிருந்ததால், பொது தரிசன வழியில், பக்தர்கள் நான்கு மணிநேரம் காத்து இருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், பறவை காவடி எடுத்து கிரிவீதியில் வலம் வந்ததை பார்த்து, பக்தர்கள் பக்தி பரவசம்அடைந்தனர்.