பதிவு செய்த நாள்
31
மார்
2024
06:03
சேலையூர்:ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி அறக்கட்டளை, சேலையூர் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி வித்யா மந்திர் கல்வி நிறுவனத்தில், பரம் வீர் சக்ராஸ் தோட்டம் என்ற நினைவிடத்தை அமைத்துள்ளது. இந்த தோட்டத்தில், பரம் வீர் சக்ரா விருது வென்ற 21 வீரர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. பரம் வீர் சக்ரா விருது, பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக, நாட்டின் மிக உயரிய ராணுவ விருதாகும். ராணுவ வீரர்களின் அசாத்திய துணிச்சல், பகை சூழலை எதிர்கொள்ளும் அசாதாரண செயல்பாடு, தேசத்தின் மீதுள்ள இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு காக்க செய்த உயிர் தியாகம் ஆகியவற்றுக்காக, பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டு உள்ளது. இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பரம் வீர் சக்ராஸ் தோட்டம் என்ற நினைவிடத்தை, அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் முன்னிலையில், கவர்னர் ரவி, நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், பரம் வீர் சக்ரா விருது பெற்ற யோகேந்திர சிங் யாதவ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோருக்கு சிறப்பு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாலையில் அனுஷபூஜை நடந்தது. இதில், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, அருளாசி வழங்கினார். இதில், பள்ளியின் தலைவர் சங்கர், நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.